தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மாநிலத்தலைவர் பொ.அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தலைவர் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலப்பொதுச்செயாளர் மாரிமுத்து இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் மாநிலப்பொருளாளர் இளங்கோ நிதியும் பொது நிகழ்வு பற்றியும், மாநில அமைப்புச்செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்துப்பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியர்களே தேசியக்கொடி ஏற்றவேண்டும் என ஆணை பிறப்பித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது. அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
12 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட வேண்டும். 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 தொற்று காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களே வர இயலாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களிடமிருந்து பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெறுவதில் இருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.