புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பெருங்குடி வலையம்பட்டியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் இன்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தேன். அப்போது செல்போனில் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு வர சொன்னார். அந்த அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த கௌரிசங்கர், உஷாராணி என்பவர்கள் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று கூறி என்னிடம் இருந்து ரூ.6.5 லட்சத்தை பெற்று கொண்டனர். பின்னர் இது தொடர்பாக இளையராஜா என்பவர் என்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

பின்னர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள அலுவலர்களை அறிமுகப்படுத்தி வைத்து, கல்வி சான்றிதழ் சரிபார்த்தார். அதனை தொடர்ந்து அரசு முத்திரையிட்ட பணிநியமன அரசாணையையும் வழங்கினார். அரசாணை வழங்குவதற்கு முன்பாக அங்குள்ள 5 அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கப்பணத்தை வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொண்டார். இவ்வாறு அரசு அலுவலர்களுடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி நீர்வளத்துறை, வருவாய் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவ மனை ஆகிய இடங்களில் வேலை வாங்கித்தருவதாக, தனசேகர், ஆனந்த, பாலகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோரிடமும் பணம் பெற்று அரசு அடையாள அட்டை பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர்.

அதன் பின்னர் மாவட்ட வருவாய் நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெறும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அழைத்தனர். அங்கு சென்ற போது பயிற்சி கட்டணம் என்று கூறி எங்களிடம் இருந்து மேலும் ரூ.1.30 லட்சம் பெற்று கொண்டனர். மேலும் நியமன ஆணை மற்றும் ஐ.டி.கார்டை வாங்கிக்கொண்ட அவர்கள் பயிற்சி வகுப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறி எங்களை அனுப்பி வைத்தனர்.அதன் பின்னர் அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அவர்களை தேடி சென்ற போது தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று நாங்கள் விசாரித்த போது, அது போன்று எந்த பணி நியமனமும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. எங்களை போன்று 11 பேரிடம் சுமார் ரூ.1 கோடி அளவிற்கு பண மோசடி செய்துள்ளனர். மேற்கண்ட நபர்கள் மீதும், அவர்களிடம் தொடர்பு வைத்துள்ள அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *