திருச்சி என்.ஆர்.ஐஏ. எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடந்தது. அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பசி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. பசி போக்குவது என்பது மிகச் சிறந்த அறச் செயல். ஆகவேதான் புறநானூற்றில் பிறரின் பசியை போக்குபவர்களை பசிப்பிணி போக்கும் மருத்துவர் என்று கூறுகிறார்கள். வயிற்றுப் பசியை ஆற்றி விடலாம். ஆனால் மனத்தின் பசியை ஆற்ற முடியாது. ருசிக்காக சிலர் மூக்கு பிடிக்க சாப்பிடுகிறார்கள். உண்மையில் மூக்கு பிடிக்க சாப்பிடுவது என்பது அந்த உணவின் வண்ணம் மற்றும் வாசனையை பொறுத்தது. சில பேர் வயிறு நிரம்பினாலும் ருசிக்காக வாயில் விரலை விட்டு வாந்தி எடுத்துவிட்டு சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் நீரோ மன்னனுக்கு இருந்ததாக சொல்கிறார்கள். இவ்வாறு இருக்கக் கூடாது. அடங்காத பசி என்பது மனப்பிறழ்வு.

உடல் பசிக்கும் அறிவு பசிக்கும் தொடர்பு உள்ளது. நாம் நிறைய சாப்பிட்டு விட்டால் தூக்கம் வந்துவிடும். சோம்பல் வந்துவிடும். ஆகவே எப்போதும் பாதி வயிறு சாப்பிட்டுவிட்டு பாதி வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் விழிப்புடன் இருக்க முடியும்.உலக வரலாற்றில் அறிவுப்பசி இருந்தவர்களால் மட்டுமே சாதிக்க முடிந்தது. கற்க கற்க அறியாமையை நாம் தெரிந்து கொள்ள முடியும். உங்களிடம் இருக்கும் வெற்றிடத்தை உணர்ந்து கற்க வேண்டும். சாக்ரடீஸ் போன்ற சாதனையாளர்கள் இறுதிவரை கற்றுக் கொண்டே இருந்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *