திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பிறகு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகளின் பிரச்சினைகள், மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதுடன் அலட்சியம் காட்டுவதாக கூறினார்.

அதனைத்தொடர்ந்து ஆற்று, ஏரி பாசன விவசாய சங்க தலைவர் பூ. விசுவநாதன் பேசும்போது தன் கையில் கொண்டு வந்திருந்த சீமை கருவேல் செடியை ஆட்சியருக்கு முன்பாக ஏந்தி ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முதல்வர் அறிவித்த பின்னும் இதுவரை நடக்கவில்லை, விவசாயிகள் மனுக்கள் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், கூட்டுறவு சங்கத்தில் நிறைய முறைகேடுகள் நடக்கிறது. விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கிறார்கள். கடன் கேட்டால் கூட்டுறவு சங்க செயலாளர் கொடுக்க மறுக்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாய சங்க தலைவர் சின்னதுரை பேசுகையில், ஏரி, குளங்களை மண் கொண்டு மேவி சாலைகளாக மாற்றுகின்றனர் .இது எந்த விதத்தில் நியாயம், இதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போகக்கூடாது. நீர்வளம் குறைந்து போகும். ஒருபுறம் மேகதாது அணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இங்கு ஏரிகளை மண்கொண்டு மூடுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்