ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடி அமாவாசையான இன்று

பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை சிறந்த நாளாகும். அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாய காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும் மிகவும் விசேஷமானது.

தாய். தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி மாத அமாவாசை அன்று திதி கொடுக்கலாம் என்பது ஐதீகம். தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் ஆறு, கடல், நதிகள் போன்ற புண்ணிய நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட பிதுர்கர்மாக்கள் செய்வது இந்துக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மூதாதையர்கள் பசியும். தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவர் என்பது நம்பிக்கை

வருடந்தோறும் ஆடி அமாவாசை அன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அன்று திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுப்பர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து சென்ற வருடம் அம்மாமண்டபம் படித்துறையில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசையான இன்று அம்மாமண்டபம் படித்துறையில் பொதுமக்கள் புனிதநீராடுவதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாமண்டபத்தின் நுழைவு வாயில் மற்றும் ஓயா மேரி படித்துறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,

பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்களில் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *