ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.

முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் குவிந்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களை ஒரே இடத்தில் அமர வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னோர்கள் உயிரிழந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது வழக்கமான நிகழ்வு ஆனால் முன்னோர்கள் உயிரிழந்த சரியான நாளில் திதி கொடுக்க முடியாதவர்கள் அல்லது முன்னோர்கள் பலருக்கு ஒரே நாளில் திதி கொடுக்க நினைப்பவர்கள் ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டப படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துரை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நள்ளிரவு முதலே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தந்ததால், அப்பகுதியில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க , போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனம் மட்டுமே அம்மா மண்டபம் வரை செல்ல அனுமதிக்கபடுகிறது. கார், வேன், ஆட்டோ, போன்ற எந்த வாகனங்களையும்  அம்மா மண்டபம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக சாலையில் முழுவதும் காவல்துறையினர் சிசிடிவி கேமரா அமைத்து தொடர்ந்து கண்கானித்து வருகிறார்கள். குறிப்பாக ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தபட்டு வருகிறது. காவிரி ஆற்றின் நடுவே சென்று நீராட தடை விதிக்கபட்டு உள்ளது. ஆனால பொதுமக்கள் தடையை மீறி உள்ளே சென்று நீராடி வருகிறார்கள், அவர்களை ஒலிபெருக்கி மூலம் அழைத்து  காவல்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *