பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க. தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை காணொலியில் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் நடத்த வேண்டும் என்று கட்டளையிட்டார்.

திராவிட மாடல் ஆட்சியின் 3-ம் ஆண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடு தோறும் கொண்டு சேர்க்கவும், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பாரதிய ஜனதா அரசு செய்து வரும் அநீதிகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இன்று (26-ந்தேதி) இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. வின் திண்ணைப் பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்குத் தொகுதி 65 வது வார்டு ஏர்போர்ட் புதுத்தெரு பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்னும் நிகழ்ச்சியை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *