திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே மாந்துரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் திருச்சியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவர்கள் பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பேருந்தில் வீட்டுக்கு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது பேருந்தில் இருந்த லூர்து ஜெயக்குமார் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அவரது அண்ணன் குப்புசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார்.இதையறிந்த குப்புசாமி அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு கபிரியேல்புரம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பேருந்திலிருந்து இறங்கிய லூர்து ஜெயக்குமாரை அடித்து உதைத்துள்ளனர்.பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சொல்வதாக கூறி மோட்டார் பைக்கில் அழைத்து வந்து மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகில் வைத்து சிலர் கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் லூர்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிண்டல் செய்ததாக கூறிய பெண்ணின் அண்ணன் குப்புசாமியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.