”நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் நலன் கருதி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணை எண்488 மேற்கண்ட அறிவிப்பை சிக்கலாக்கியது.

அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்து பட்டியலை தயார் செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது.

குறிப்பாக கோவை சிறைச்சாலையில் ‘வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது. இந்நிலையில் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சிறைவாசிகள் குடும்பத்தார் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இறையருள் அறக்கட்டளை தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார்.

சிறைவாசிகள் குடும்பத்ததை சேர்ந்த  பெண் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் அவரது மகன் மைக்கை பிடுங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அன்போடு “ஸ்டாலின் மாமா” என் அப்பாவை விடுதலை செய்யுங்கள் என கேட்டது. ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

உங்கள் தோழன் அறக்கட்டளை அப்துல் ரஹீம், இளைஞர்கள் பொது நலச்சங்கம் சுலைமான், அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, பெண் விடுதலைக் கட்சி நிறுவனத்தலைவர் சபரிமாலா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இறுதியாக இளைஞர்கள் பொது நலச்சங்க செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *