சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். சிலம்பாட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறிஞ்சி மலைகள் வரை இந்த கலை அதன் வரலாற்றைக் காட்டுகிறது. இப்பகுதியின் பூர்வீகக் குடிகளான நரிக்குறவர், காட்டு விலங்குகள் மற்றும் பிற தாக்குதல்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள சிலம்பாட்டத்தைப் பயன்படுத்தினர். சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு களத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

இத்தகைய ஆட்டத்தை தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிலர் மீட்டெடுத்து வருகிறார்கள். அதன்படி திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள மொரைஸ் கிளாரியன் அரங்கில் உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் நடத்தும் உலக வரலாற்றிலே தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை, சிலம்பத்தில் ஒரு தேடல் லீக் போட்டி – 2023 என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் தலைவர் டென்னிசன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தபட்டது.

 இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் தலைவர் டென்னிசன் பேசியது.. 

அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேலும் சிலம்பத்தை உலக அளவில் போற்றக்கூடிய போட்டியாக நிலை நிறுத்த வேண்டும் என்பதை எங்களுடைய நோக்கம். ஆகையால் வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களில் பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர்களை தேர்வு செய்து ,சென்னையில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்பார்கள். மேலும் தமிழ்நாடு அரசு விளையாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நமது பாரம்பரிய கலை சிலம்பத்தை உலகளவில் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *