திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சியை சேர்ந்த, முத்துக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் ஜெகன். எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர். தனது 17 வயதில் அடிதடி வழக்கில் கைதானார். நண்பர்களுக்காக அடிதடி வழக்கில் ஈடுபட்டு, அது நாளடைவில் பெரிய அளவிலான ரவுடிசத்திற்கு வழி வகுத்தது. 2012 ஆம் ஆண்டு முதல் திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அடிதடி, கொலை முயற்சி, கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு, திருச்சி மண்ணச்சநல்லூரில் பஞ்சாயத்து தலைவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் முதல் முறையாக கைதானார். திருச்சி புத்துரை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் 2014 ஆம் ஆண்டு ஜெகன் கைது செய்யப்பட்டார். அதேபோன்று 2015 ஆம் ஆண்டு சக்திவேல் என்பவர் கொலை வழக்கிலும் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பல்வேறு கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்.இவ்வாறு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மே மாதம் 19 ஆம் தேதியன்று ஜெகன் எனும் கொம்பன் ஜெகன், தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக, இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இவரது கூட்டாளிகள் ஒன்பது பேர் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்டனர். சம்பவம் அறிந்து, அங்கு வந்த திருவெறும்பூர் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் வனப் பகுதியில் கொம்பன் ஜகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது, உதவி ஆய்வாளர் வினோத் என்பவரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், ரவுடி கொம்பன் ஜெகனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர்.இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சனமங்கலம் வனப் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஜெகன் உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்தது. வலது இதயத்தில் ஒரு குண்டும், இடது மார்புக்கு கீழ் ஒரு குண்டும் பாய்ந்து உயிரிழந்துள்ளார். திருச்சி லால்குடி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த, ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் உடல், திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்