திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி குண்டூரில் மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் மாநில அளவில் 28 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி அணிகள் கோயம்புத்தூர் கேபிஆர் மில்ஸ் அணி இறுதி போட்டியில் மோதின. இதில் ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி அணி வென்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் 2 ஆம் இடத்தை கேபிஆர் மில்ஸ் அணி பிடித்தது. 3ஆம் இடத்தை தேக்கம்பட்டி சிவகுமார் ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது.

 

 இதே போல ஆண்களுக்கான போட்டியில் மாநில அளவில் 32 அணிகள் பங்கு பெற்று விளையாடின. இதில் லீக் போட்டிகளின் முடிவில் தமிழக காவல்துறை அணியும், திருச்சி மாநகர காவல்துறை அணியும் மோதின. இதில் அதிகபுள்ளிகளை எடுத்த தமிழக காவல்துறை அணி முதலிடம் பிடித்தது. 2 ஆம் இடத்தை திருச்சி மாநகர காவல்துறையினரும், 3 ஆம் இடத்தை பாளையநல்லூர் பாசப்பறவை அணியும் பிடித்தது.

போட்டிகளின் முடிவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிசளிப்பு விழாவில் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ. 20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இதே போல ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து அணிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.