திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா, வெளிநாடுவாழ் இந்தியர் இறப்பிற்கான நிவாரண உதவி, சத்துணவுத்திட்டம் சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம்மற்றும் சலவைப் பெட்டிகள், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் நெல் நடவு இயந்திரங்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள், வேளாண்மைத் துறை சார்பில் கைத்தெளிப்பான்கள்,

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விலையில்லா இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி மற்றும் சமூக நலத்துறை சார்பில்முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரம் என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூபாய் 98 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், கதிரவன், அப்துல்சமது, திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்