தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் அதிலும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப் பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தங்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை வீடு வீடாக வந்து ஆவணங்களை சரி பார்க்கவில்லை, மகளிர் உரிமை தொகைக்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டி திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நியாய விலை கடை முன்பு 20க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில்:- உரிமைத்தொகை வழங்குவதற்காக ஏ.டி.எம் கார்டு எங்கள் பகுதியில் ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாரபட்சம் இன்றி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *