திருச்சி நம்பர் 1 டோல்கேட் சீனிவாச நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, 4-வது மாடியில் உள்ள வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அருகில் குடியிருப்போர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய தேன்மொழி இவர் திருச்சி திருப்பஞ்சிலி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை காதலித்துள்ளார். இந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக இந்த இளம் காதல் ஜோடிக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் ரஞ்சித் குமார் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்ட ஆரோக்கிய தேன்மொழி உடனடியாக தனது கணவர் ரஞ்சித் குமார் வீட்டிற்கு சென்று திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த 15 பவுன் தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு கணவர் ரஞ்சித் குமார் கூடிய விரைவில் நகைகளையும் பணத்தையும் தருவதாக கூறியுள்ளார். மேலும் நாட்கள் கடந்து செல்லவே கணவர் ரஞ்சித் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் தனது கணவர் ரஞ்சித் குமார் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை தனது கணவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு சென்று தனது கணவர் ரஞ்சித் குமார் இடம் வரதட்சணையாக கொடுத்த நகைகளையும், பணத்தையும் கேட்டார். அப்போது திடீரென ரஞ்சித்குமார் வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த இளம்பெண் கணவர் வீட்டு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார் இளம் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்