நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுக்கொரு முறை குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும் பத்ம பூஷண் 17 பேருக்கும் பத்ம ஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் பட்டியலில் ஒன்பது தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த எஸ். தாமோதரன் என்பவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமாலயா என்ற சேவை நிறுவனத்தின் வழியாக கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு சமூக சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து தாமோதரன் கூறிய போது:-

சுகாதார மேம்பாட்டிற்காக திருச்சிராப்பள்ளியில் துவங்கிய திட்டம் இன்று தென் இந்தியாவில் கேரளா ஆந்திர பிரதேசம் தெலுங்கானா புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது.மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த ஆறு மாநிலங்களில் மனித வள ஆதார அமைப்பாக ஒரு பயிற்சி மையத்தை அறிவித்து அரசு அலுவலர்களுக்கு சுகாதாரத் திட்டத்திலும் பயிற்சி அளிக்கக்கூடிய நிறுவனமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். இந்த விருது எனக்கு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விருதினை நான் என் சக பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். எங்கள் திட்டப் பகுதியில் உள்ள மக்கள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக திட்டமாக மாற்றிய அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். மத்திய அரசு மற்றும் மாநில அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு என் பெயரை பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை கிராமாலயா சார்பில்  6 மாநிலங்களில் 6 லட்சம் தனிநபர் கழிப்பிடங்களை கட்டியுள்ளோம். இந்த கழிப்பிடங்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து மக்கள் பராமரிப்பிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றன.திருச்சியில் உள்ள கல்முனைப் பகுதியில் 2002 ஆம் ஆண்டு குடிசை பகுதிகளை முழு சுகாதார குடிசை பகுதிகளாக அன்றைய மாநகராட்சி ஆணையர் அறிவித்தார் அதிலும் கிராமாலயா நிறுவனத்தின் பங்கு உள்ளது. திருச்சி மாநகராட்சியில் நாங்கள் செயல்படுத்திய திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக மற்ற மாநகராட்சிகளிலும் நகர்ப்புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் 12- ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்த திட்டம் முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆராய்ச்சி பஞ்சாயத்தில் உள்ள தாண்டவம் பட்டி கிராமம் இந்தியாவின் முதல் சுகாதார கிராமமாக அறிவித்தார்கள். இந்த கிராம மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுவதுமாக நிறுத்தி உள்ளனர். தற்போது மாதவிடாய் பற்றிய சுகாதார சானிடரி நாப்கின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் குப்பையாக மாறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மக்கள் துவைத்து துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதார சானிடரி நாப்கின் அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *