மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி ( 40). இவர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக இருந்த போது அவருக்கு பல பேரிடம் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. இதனால் சுஜித் மைட்டியிடம் பலர் தங்க கட்டிகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி வாங்கி வந்தனர். அவரின் நகை வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்தது. இதனால் அவரிடம் ஆர்டர்கள் குவிந்தது. கிலோ கணக்கான தங்க கட்டிகளை அவர் பெற்று ஆபரணங்களாக மாற்றி கொடுத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடங்கியது. கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட சுஜித் மைட்டி அதில் பெட்டிங் (சூதாட்டம்) கட்ட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அதில் பணம் வர தொடங்கியது. பின்னர் அதில் அவர் லட்ச கணக்கான பணத்தை இழக்க தொடங்கினார். இதற்காக அவர் பலரிடம் வாங்கிய நகைகளை விற்று செலவு செய்ய தொடங்கினார். ஐ.பி.எல் சூதாட்டத்தில் இழந்த பணத்தை எப்படியாவது விரைவில் மீட்க வேண்டும் என அவர் நினைத்தார்.

அதற்கு அவர் ஆன்லைன் சூதாட்டம் சிறந்த வழி என நினைத்து அதிலும் பணத்தை வாரி இறைத்தார். ஆனால் அதிலும் பணத்தை இழந்தார். நாளடைவில் அவரிடம் நகையை கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் அவர் ஒருவரிடம் வாங்கிய நகையை மற்றவரிடம் கொடுத்து சில நாட்கள் சமாளித்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல நகை கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பி கேட்க தொடங்கினர். அப்போது அவர் தன்னிடம் உள்ள 2 கிலோ தங்கத்தை எடுத்து கொண்டு தான் இழந்த பணத்திற்கு அதை வைத்து கொள்ள முடிவு செய்தார். கோவையில் இருந்தால் தன்னை விடமாட்டார்கள் என நினைத்த அவர் இங்கு இருந்து நகையுடன் தப்பி செல்ல முடிவு செய்தார். முதற்கட்டமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொல்கத்தாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் சுஜித் மைட்டி 2 கிலோ நகைகளுடன் இங்கு இருந்து தப்பினார். தங்க கட்டிகளை கொடுத்தவர்கள் அவர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகையை கொடுத்த வடவள்ளியை சேர்ந்த கனகராஜ், செட்டி வீதியை சேர்ந்த குருசாமி, டவுன்ஹால் பகுதியை பிரகாஷ், ஜனா ஆகியோர் வெரைட்டி ஹால் போலீஸ் நிலையம் மற்றும் பெரியகடை வீதி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். 2 கிலோ நகையை திருடி சென்ற சுஜித் மைட்டியை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து துணை கமிஷனர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் பெரியகடை வீதி இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் கார்த்தி, உமா, பூபதி ஆகியோர் சுஜித் மைட்டியை தேடி வந்தனர். அப்போது அவரது செல்போன் எண்ணை டவரை ஆய்வு செய்தனர். அதில் அவரது செல்போன்என் காசி, வாரணாசி, நேபாளம் என சுற்றி வந்தது. பின்னர் அவரது எண்ணை பின் தொடர முடியவில்லை. அவரை கண்டு பிடிக்க கோவையில் இருந்த அவரது உறவினரின் செல்போன் எண்ணை பின் தொடர போலீசார் முடிவு செய்தனர். உறவினரின் செல்போனை பின் தொடரந்த போது அவருக்கு சுஜித் மைட்டி புதிய செல்போன் எண்ணில் டெல்லியில் இருந்து பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த எண்ணை வைத்து அவரை பிடிக்க முடிவு செய்தனர். அப்போது அவர் டெல்லியில் இருந்து கோவை வருவது தெரியவந்தது. போலீசார் அந்த எண்ணை கண்காணித்தனர். ரெயில் மூலம் சுஜித் மைட்டி கோவை வருவதை உறுதி செய்த போலீசார் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுடன் கலந்து அவரை பிடிக்க காத்திருந்தனர். ரெயிலில் இருந்து அவர் இறங்கியதும் போலீசார் சுற்றி வலைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 கிலோ தங்கத்தில் அரை கிலோ தங்கத்தை அவர் ஆடம்பரமாக செலவு செய்தது தெரிவந்தது. அந்த பணத்தில் அவர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி ஊரை சுற்றி வந்துள்ளார். பெண்களிடமும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1½ கிலோ, 1500 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *