திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஜா பேட்டை அண்ணா நகர் தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக இந்ந தெருவின் மத்தியில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சிமென்ட் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில், மின்கம்பம் பழுதடைந்து மிக மிக மோசமாக காட்சியளிக்கிறது.

மேலும் அரசமரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து பெல்சி கிரவுண்டுக்கு செல்வதற்கு இந்த தெருவை தான் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகனத்தில் சென்று வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த தெருவில் மழை நீர் ஆறுபோல் வழிந்து ஓடுகிறது மேலும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி பழுதடைந்த மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

ஏற்கனவே பழுதடைந்து இருக்கும் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மின்கம்பம் விழும் வரை, மின்வாரியம் பொறுமை காக்க கூடாது. உடனடியாக, பழுதான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் மழைக்காலங்களில் சாக்கடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.