திருச்சி பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக பாலக்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்திய அபிநிஷா, ரவிக்குமார், அசோக், பானு மற்றும் இரண்டு நபர்கள் உட்பட 6 பேரையும் சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கின் குற்றவாளியான பானு (எ) பியாரி பானு என்பவர் சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மகளிர் தனிச்சிறையில் இருந்து வரும் குற்றவாளி பானு (எ) பியாரி பானு மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.