கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கும் கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கும், தற்போது ஏழாம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக முதல்வர் பிறப்பித்தார்.

தற்போது திருச்சி மாவட்டத்தில் சில நாட்களாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்றை அதிகப்படுத்தும் விதமாகமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை காவல் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நிவாரண பொருட்களை வாங்குவதற்காக சமூக இடைவெளி இன்றி குவிந்த பொதுமக்கள் மற்றும் திமுகவை சேர்ந்த கட்சியினரால் தற்போது திருச்சி மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஒரு பக்கமும், கொரோனா நோய்த்தொற்றை அதிகப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது மக்களின் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது எனவும். இதுபோன்ற அமைச்சர் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி கூடுவதை காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஏன் திருச்சி மாவட்ட கலெக்டர் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *