தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கார் மூலம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

முன்னதாக கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திருச்சியில் பத்திரிக்கை சகோதரர்கள் பார்ப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி, தஞ்சை பல்கலைக்கழக பாரதியார் விழாவிற்கு சென்று கொண்டிருக்கிறேன். இது நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் உங்களுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பல கோப்புகள் வருவதால் அரை மணி நேரத்தில் தஞ்சை போய்விட்டு மீண்டும் வர வேண்டியிருக்கிறது. என்னை பொறுத்தவரை கொரானா இன்னும் முழுமையாக போகவில்லை. பல நாடுகளில் சில இடங்களில் நோய்தொற்று அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் யாரும் அஜாக்கிரதையாக இல்லாமல், முக கவசம் அணிந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். நான்காவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது மிதமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஆனாலும் 12 முதல் 14 வரை உள்ள குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் நாம் ஊசி போட கூற வேண்டும். எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

கேள்வி: நீட் தேர்வை ரத்து செய்வதற்காக நேரடியாக ஜனாதிபதை சந்திக்கப் போகிறார் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறாரே அதில் ரத்து ஏதேனும் வாய்ப்பு இருக்கா?

பதில்: என்னால் பதில் சொல்ல முடியாது, இன்னொரு மாநிலத்தில் உள்ள கவர்னர் பற்றியோ, அரசியல் ரீதியாக பதில் சொல்வது சரியாக இருக்காது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகையையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.