திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கூழையாறு மற்றும் புள்ளம்பாடி அருகே உள்ள நந்தியாற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று வந்திருந்தார். அப்போது செல்லும் வழியில் ஆலங்குடி மகாஜனம் அருகே காரை நிறுத்திய முதலமைச்சர் அப்பகுதியில் நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர் எனவே பேருந்து வசதி செய்து தருமாறு பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காலை 8மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும் காலை 8.35 மணி மற்றும் மாலை 6.5 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திற்கும் 4 நடைகள் பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்தார்.அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து செம்பரை காட்டூர் வழித்தடத்தில் லால்குடிக்குடிக்கு 88P என்ற நகர் பேருந்து இயக்கப்பட்டது.

முன்னதாக கிராம மக்கள் பேருந்திற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மாலை அணிவித்தும், பள்ளி சிறுவர்கள் பேருந்திற்கு வண்ண காகிதங்களை ஒட்டி அலங்கரித்தனர். தொடர்ந்து தேங்காய் வாழைப்பழம் வைத்து பொதுமக்கள் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியதை தொடர்ந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்தில் ஏறி பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பெண்கள் பேருந்தில் ஆரவாரத்துடன் ஆடி குதித்து நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *