தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், திருச்சி மாவட்ட ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மோட்டார் வாகன தொழில் சார்ந்த பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்று கொடுக்கின்ற தொழிலாளர்கள் குறைந்தபட்சம் இருபது லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த மோட்டார் வாகன தொழிலை சார்ந்து இருக்கிறோம். தற்போது போக்குவரத்து அலுவலகங்களில் புதிய மாற்றங்கள் மற்றும் ஆன்லைன் அபராதத்தில் உள்ள புதிய நடைமுறைகளால் எங்களது தொழில் சார்ந்தவர்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பெயர் மாற்றம் செய்ய பழைய வாகன உரிமையாளரின் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் கேட்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பழைய வாகனத்தை வாங்கி வைத்திருக்கும் உரிமையாளர் யாரும் பெயர் மாற்றம் செய்ய முன் வருவதில்லை.

தற்போது உள்ள அதிகபட்ச ஹெல்மெட் அபராதம் 1000 ரூபாய், ஒரு சாமானிய மக்களின் மூன்று நாள் குடும்ப செலவாகும். வாகனத்திற்கு அபராத தொகை பதிவிடும் போது வாகனத்தின் எண் சரியாக தெரியாத பட்சத்தில் அபராதம் வேறு ஒரு வாகனத்திற்கு தவறுதலாக விதிக்கப்படுகிறது இதனை நீக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர் . இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்பேர் அசோசியேசன் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட பொருளாளர் ஷாஜகான் மற்றும் ஷேக் தாவூத், பாபு, அப்துல் ஹமீது (எ) பாபு, சிவா (எ) சிவகுமார், பாலசுப்பிரமணியம் (எ) ராஜா, செயலாளர் ஜேம்ஸ், துணை தலைவர் அகஸ்டின், திருச்சி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி, செயலாளர் செல்வம், துணை தலைவர் பிலோமின் ராஜ் உள்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *