ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாகும். வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்ற நிலை உள்ளது. மேலும் தற்போது தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு அவசியம். அவ்வாறு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அவசியம். அவ்வாறு ஆதார் கார்டு இருந்தாலும் அது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக பலர் ஆதார் கார்டு விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் ஆதார் கார்டு புதுப்பிக்கவும் செய்தனர். இவர்களுக்கு ஆதார் கார்டு தபால் மூலம் நேரடியாக வீட்டிற்கே அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்பட்ட ஆதார் கார்டுகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 500 க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் பூவாளூரில் உள்ள நிர்மலா என்பவரின் வீட்டின் முன்பாக கொட்டிக்கிடந்தது. ஆதார் கார்டுகளில் உள்ள அனைத்து முகவரியும் பூவாளுரை சேர்ந்ததாக உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  பொதுமக்களுக்கு தபால் மூலம் வந்த ஆதார் கார்டுகளை சரியாக வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யாமல் தபால் ஊழியர் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும்போது… ஆதார் கார்டு என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது இதை விளையாட்டுத்தனமாக ரோட்டில் தூக்கி எரிந்துள்ளனர் ஆதார் வாங்குவதற்கு மக்களாகிய நாங்கள் எவ்வளவு சிரமப்படுகிறோம் என்பது இந்த அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா ஆதார் கார்டுகள் மற்றும் தபால்களே தூக்கி எறிந்தது யார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *