திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடபட்டது. ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து ஹோட்டலை காலி செய்யுமாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து ஹோட்டலை காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கும், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹோட்டலை காலி செய்ய இன்று மாலை 3 மணி வரை அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர்கள் சோனா பிரசாத், பார்த்தசாரதி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…..SRM ஹோட்டல் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த இடத்திற்கு ஆண்டுதோறும் முறையாக குத்தகை பணம் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுடன் குத்தகை ஒப்பந்தம் முடிந்த உடனே அதிகாரிகள் தரப்பில் உடனடியாக ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது ஹோட்டலில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர்.

அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் உடனடியாக ஹோட்டலை காலி செய்ய முடியாது. கால அவகாசம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும் என எங்கள் தரப்பில் தெரிவித்தோம். ஆனால் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். தெளிவாக தற்போதைய நிலைமையை எடுத்து உரைத்தோம். ஆனால் அவர்கள் எதையும் கேட்காமல் உடனடியாக ஹோட்டலுக்கு சீல் வைப்போம் என தெரிவித்துவிட்டனர்.

தேர்தல் முடிந்தவுடன் இது போன்ற நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அருண்நேரு தூண்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எங்களுக்கு ஒரு மாதமாவது கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *