வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ‘ *இந்தியா* ‘ கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 2024 பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இதன் முதல் கூட்டம் இன்று திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்ட உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை திருவாரூர் தஞ்சை மத்திய, தெற்கு திருச்சி மத்திய மற்றும் திருச்சி தெற்கு, வடக்கு புதுக்கோட்டை தெற்கு வடக்கு ஆகிய 15மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொறுப்பாளர் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் ஆர்.எஸ்.பாரதி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் கழக நிர்வாகிகள் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.