அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு சமீபத்தில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற விச்சு எம்.லெனின் பிரசாத், மாநில பொதுச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், திருப்பூர் சரவணன், மாநில செயலாளர் சரவணன் சுப சோமு ஆகியோர் நேற்று முதன்முறையாக திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி, அம்பேத்கர், அடைக்கலராஜ் புத்தூர் பகுதியில் உள்ள இந்திரா காந்தி, சத்திரம் பஸ் நிலையம், காங்கிரஸ் கட்சிஅலுவலகம் முன்பு உள்ள காமராஜர், மகாத்மா காந்தி ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சால்வையும், மாலையும் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜி.எம்.ஜி. மகேந்திரன், எம்.டி.பிரேம் ஆனந்த், ரமேஷ் சந்திரன், லால்குடி பிரபு, தற்போதைய இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி யாகப்பா அன்டு குரூப்ஸ் எஸ்.டென்சிங் பெர்னாட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தலைவர் விச்சு லெனின்பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-

தமிழகத்தில் நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் 2000 புதிய நிர்வாகிகள் கிடைத்துள்ளனர். மேலும் தலைவர் ராகுல் காந்தியின் ஈர்ப்பால் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களைக் கொண்டு வார்டு வாரியாகவும் பூத் வாரியாகவும் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருக்கிறது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் இன்னும் சில தினங்களில் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள முன்னணி தலைவர்களை கொண்டு ஒரு மாபெரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக இளைஞர் காங்கிரஸ் கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படும். வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இளைஞர் காங்கிரஸ் இன்று முதல் தயாராவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். மேலும் கடந்த 7 வருடங்களாக பாரதத்தின் பிரதமர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி அவர்கள் இந்திய மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார். இந்த ஏழு ஆண்டு ஆட்சி காலங்களில் 14 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருப்பதை மோடி அமைச்சகம் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ஏற்படுத்தி தரப்பட்டது. ஆனால் தற்போது பெரும் பணக்காரர்களுக்கும், இந்தியாவை விட்டு வெளியேறும் மோசடி நபர்களுக்கு மட்டுமே கடன் வழங்க இந்த பாஜக அரசு உறுதுணையாக இருக்கிறது.

உக்ரேனில் இந்திய மாணவர் ஒருவர் இறந்துள்ளார். அவருக்கு தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்பு அளித்திருந்தால். அல்லது பணம் கட்ட முடியாத சூழ்நிலையில் கல்விக்கடன் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் அந்த மாணவர் வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. இறந்த மாணவருக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தேன் என்ற செய்தி வந்துள்ளது. அண்ணன் அண்ணாமலை அவர்கள் 36- வயதில் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்திருந்தால் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரங்கள் புத்தகங்கள் வாசித்தார் அதை எப்படி புரிந்து படித்தார். என்பதை சொன்னால் எங்களை போன்ற இளைஞர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில் அண்ணன் அண்ணாமலை அவர்கள் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்து இருந்தால் பிரதமர் மோடி அவர்கள் மிகப் பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எங்களுடைய கருத்து என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *