திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தென் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ், திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திலீப் குமார், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : திருச்சி மாவட்டம் முழுவதும் சுமார் 800 குழந்தைகளுக்கு மேல் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ மாநகராட்சி அதிகாரிகளோ நோய் தொற்றை கட்டுப்படுத்த எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கின்றனர். அதற்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் எனக் கூறி சாலைகளை சேதப்படுத்தி உள்ளனர். சேதப்படுத்திய சாலைகளை இன்றளவும் சீரமைக்க படாமல் இருப்பதே உடனே சீரமைத்து பருவமழை காலங்களில் உரிய வடிகால் முறையை சீரமைக்க வேண்டும். திருச்சி மாவட்டம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் உலா வரும் கஞ்சா போதை ஊசிகளை விற்பனை செய்யும் சட்ட விரோத செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாவட்டம் முழுவதும் விற்கப்படும் சட்ட விரோத லாட்டரி விற்பனைகளை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் காவேரி கரையில் நடைபெறும் சட்ட விரோத மணல் திருட்டை தடுக்க வேண்டும் ,மணப்பாறை காய்கறி மார்க்கெட் சரி செய்ய வேண்டும், துவாக்குடி சர்வீஸ் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.மூர்த்தி பேசியது.. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று தென் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட தலைவருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகரப்புறங்கள் வரை பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்துவதற்கான செயல்களில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் அதேசமயம் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என அறிவுரைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்தில் கிடைக்க வேண்டிய தண்ணீரை முறையாக திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகா மாநிலம் அதை செய்ய மறுக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி விரைந்து முடிவு எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதத்தை காக்க வேண்டும் என தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் செயல்படுகிறார் முதல்வர் என ஏ.கே. மூர்த்தி குற்றம் சாட்டினார். மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் மாபெரும் கூட்டணி அமைக்கபடும். மேலும் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வேட்பாளர் அறிவித்து மாபெரும் வெற்றி பெறுவோம். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆகியோர்கள் இறுதியான முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்