தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக;- சாலைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியல் தமிழ்நாடு சார்நிலைப்பணி அமைப்பு விதிகள் 35- 35a அடிப்படையில் வெளியிடவேண்டும். ஆய்வாளர் நிலை 2 பதவி உயர்வு அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணி மாற்றம் தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும். அரசாணை எண் 133 நாள் 13 10 2021 இன் படி சாலைப் பணியாளர்களுக்கு வேலை நிறுத்த நாட்களை முறைப்படுத்தி ஊதியப்பலன் வழங்க வேண்டும்.

மணப்பாறை உட்கோட்டம் மருங்காபுரி பிரிவில் பணியாற்றும் சாலைப் பணியாளர்களுக்கு அரசின் வழிகாட்டு ஆவணங்களின்படி நகராட்சி வீட்டு வாடகை படி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்கு உரிய கருவி தளவாடங்கள் காலணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் மலர் மன்னன் சண்முகம், பால்பாண்டி, ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக மாநில பொதுச்செயலாளர் அம்ச ராஜ் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்