தமிழகத்தில் கொரானா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களில் பயணித்து வருவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையில் மினிடோர் வாகனங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி திருச்சியில் மாநகர பகுதிகளில் 535 வாகனத்திலும் புறநகர் பகுதியில் 500 வாகனத்திலும் வீடுகளுக்கே கொண்டு சென்று காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். மேலும் தள்ளுவண்டி மூலம் வியாபாரத்தை மேற்கொள்பவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரியமங்கலம் அபிஷேகபுரம் பொன்மலை ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் அனுமதி பெற்று வியாபாரம் மேற்கொள்ளலாம் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு திருச்சியில் உள்ள 4கோட்ட அலுவலகங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது.அந்த அனுமதி அட்டையில் வியாபாரியின் பெயர், வியாபாரம் செய்யும் இடம் மற்றும் அவரது புகைப்படம் ஒட்டி வழங்கப்பட்டது.ஆனால், திருச்சி தில்லைநகர் பகுதியில் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் அங்கு தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த வியாபாரியின் அடையாள அட்டை வாங்கி பார்த்தபோது அவர் ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்வதற்காக அட்டை வழங்கப்பட்டுள்ளதை கண்டு அவருக்கு ரூபாய் 200அபராதம் விதித்தனர். மேலும் இப்பகுதியில் வியாபாரம் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *