கடந்த சில நாட்களாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வப்போது கோவீஷீல்டு தடுப்பூசி மட்டும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவேக்சின் முதல் தவணை செலுத்திக் கொண்ட பொதுமக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் இன்று கலையரங்கம் திருமண மண்டபம், ஜமால் முகமது கல்லூரி, ஆகிய இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அதிகாலை முதல் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்கப்படாததால் மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து டோக்கன் வழங்கப்பட்டது.டோக்கனை பெற்றுக் கொண்ட பொதுமக்கள், விரைவாக செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக முண்டியடித்து சென்றதால் சமூக இடைவெளியை காற்றில் பறந்தது.