திருச்சி மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்துவந்தவர் வெங்கடேஷ் இவர் நேற்று முன் தினம் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிறகு மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர் இறுதி சடங்கை முடித்தனர்.

அப்போது அங்கு வந்த திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் அகோரியான மணிகண்டன் மற்றும் சில அகோரிகளுடன் உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு அகோரி மணிகண்டன் இறந்த வெங்கடேசனின் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓதி ஆன்ம சாந்தி அடைய சிறப்பு பூஜை செய்தார்.

மேலும் சக அகோரிகள் மேள தாளம் அடித்து, சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர். இது போன்ற விசித்திரமான பூஜைகள் வடமாநிலங்களான காசியில் மட்டுமே நடைபெறும். ஆனால் திருச்சி சுடுகாட்டில் இப்படி நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விபத்தில் இறந்த வெங்கடேசன் அகோரி மணிகண்டனின் சிஷ்யராக இருந்ததாகவும் அதனால் அவரின் குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த விசித்திர பூஜை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற விசித்திரமான பூஜைகளுக்கு அரியமங்கலம் காவல்துறையினர் அனுமதி அளித்தனரா? அல்லது இதுபோன்ற பூஜை நடைபெறுவது குறித்து உளவுத்துறைக்கு தகவல் தெரிந்தும் தெரியாதது போல் இருந்தனரா? என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *