திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி – மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவர்களின் செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தலித் கிறிஸ்துவ மக்கள் ஸ்டீபன் தாஸ் கூறியது… புறத்தாக்குடி – மகிழம்பாடி கிராமத்தில் உள்ள புனித சேவியார் பங்கு ஆலயம், (கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்டது.) இந்த பங்கு ஆலயத்தில் நடைபெறும் அனைத்து சாதிய தீண்டாமை, பாகுபாட்டை கடைப்பிடிக்கும் கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர், மற்றும் புறத்தாக்குடி – மகிழம்பாடி பங்கு தந்தையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள புனித சேவியார் பங்கு ஆலயத்தில், பங்கு திருவிழாவில் கத்தோலிக்க ( தலித் கிறிஸ்துவ பள்ளர், கிறிஸ்துவ பறையர் ), கிறிஸ்தவர்களிடம் வரி வசூல் செய்யாமல் புறக்கணிப்பது. பங்கு ஆலயத்தில் தலித் கிருத்துவர்கள் பங்கு பேரவையில் வந்து விடுவார்கள் என்பதற்காக பங்கு பேரவை அமைக்காமல் இருப்பது. மேலும் பங்கு திருவிழா காலங்களில் தலித் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொடி ஊர்வலம், குருத்தோலை பவனி, மெழுகுவர்த்தி பவனி வர மறுக்கின்றனர். அதேபோல் திருவிழாவின்போது சப்பாரத்தினை ( சிறிய தேர்) தொடுவதற்கு கூட தலித் கிறிஸ்தவர்களை அனுமதிப்பதில்லை. ஆகையால் தொடர்ந்து இந்த ஆலயத்தில் திருவிழாவின்போது தீண்டாமையின் உச்சமாக சப்பாரத்தில் மற்றும் பெரிய தேரில் வைக்கப்படும் சாமி சுருவத்தினை தொடுவதற்கும், தூக்குவதற்கும் மற்றும் சுருவத்தின் மீது மாலை போடவும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக தேரின் மீது வைக்கப்படும் கலசத்தை இன்று வரை தூக்குவதற்கும், தொடுவதற்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து இந்த ஆலயத்தில் நடைபெறும் பாஸ்கா மத கலாச்சார திருவிழாவின் போது தீண்டாமை அடிப்படையில் நடக்க விடாமல் தலித் கிறிஸ்துவர்களை புறக்கணிப்பது. இந்தப் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பையும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர், புறத்தாக்குடி – மகிழம்பாடி பங்குத்தந்தை இது நாள் வரையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வருவதோடு சாதிய கிருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது அதில் மேலாதிக்கம் கீழ் ஆதிக்கம் என சாதிய வேறுபாடு தலை தூக்கி உள்ளது. தொடர்ந்து தலித் மக்களையும் தலித் கிறிஸ்துவ மக்களையும் அவமதிப்பது, புறக்கணிப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனை தொடர்பாக பலமுறை புகார்கள் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தும் இதுவரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆகையால் எங்கள் மக்களை வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் எங்களுடைய கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வருகின்ற நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் தலித் கிறிஸ்தவர்களை முழுமையாக அனுமதித்து அனைத்து சலுகைகளையும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பயன்படுத்த வேண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *