திருச்சி மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56).இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதன் விற்பனையாளர்கள் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டனர்.
பின்னர் சூப்பர்வைசர் செல்வராஜ் விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்தி 77 ஆயிரத்து 80 பணத்தை எண்ணி கடை லாக்கரில் வைத்து பூட்டினார். அதன் பின்னர் கடை ஷட்டரை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். மறுநாள் காலை 7 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு டாஸ்மாக் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொன்மலை போலீசில் புகார் செய்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த பணம் அப்படியே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டனர்.டாஸ்மாக் ஷட்டர் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் லாக்கர் பூட்டை உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.