திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர்சோலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் பொன்னி டெல்டா பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 24). திருவளர் சோலையில் பழக்கடை வைத்துள்ளார். விக்னேஷின் உறவினர் பெண்ணை நாகேந்திரன் காதலிப்பது தொடர்பாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு நாகேந்திரன், அவருடன் சென்ற லால்குடி அருகே சங்கேந்தியை சேர்ந்த அவரது நண்பர் ஜீவானந்தம் சேர்ந்து விக்னேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இது தொடர்பாக, ஜீவானந்தத்தின் ஆதரவாளர்களான திருவளர்சோலை கீழத்தெருவை சேர்ந்த ஜான் மகன் நெப்போலியன் (29), காமராஜ் மகன் கதிரவன் (34), சேட்டு மகன் சங்கர் குரு (35), ரமேஷ் மகன் கமலேஷ் (18) உள்ளிட்ட சிலர் விக்னேஷ் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறு செய்துள்ளனர்.

அதையடுத்து விக்னேஷ் தரப்பினரும் அங்கு குவிந்தனர். இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டை, கல், கத்தி என கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், நாகேந்திரன், ஜீவானந்தம், நெப்போலியன், கதிரவன், சங்கர் குரு, கமலேஷ் ஆகிய, 6 பேருக்கும் கத்திக்குத்து உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இவர்களில் நெப்போலியன் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கத்திக் குத்துப்பட்ட கதிரவன் உள்ளிட்டோர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து, விக்னேஷ் எசனகோரையை சேர்ந்த மனோஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோட்டை காவல்நிலையத்தில், விக்னேஷ் உறவினர்கள் உட்பட, 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இருதரப்பு மோதல் சம்பவத்தால், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், திருவளர்சோலை பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பட்டியின மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்தின் புறநகர் பகுதியில் திருவளர்ச் சோலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி மோதல்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ஸ்ரீரங்கத்தில் இருந்துதான் போலீசார் வர வேண்டி இருக்கிறது.அதற்குள், நேற்று நடந்த கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. எனவே, திருவளர்சோலையில் நிரந்தரமாக ஒரு புறக்காவல் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *