திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதியை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் உந்தப்பட்டு உறையூர், தில்லைநகர் பகுதிகளில் உள்ள 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அக்கிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.அந்த நீரில் இரும்பு தாதுவின் அளவு அதிகம் (0.60 mg/ltr) இருந்ததால் இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் பெறப்பட்டதாலும், அதனை சரிசெய்யும் பொருட்டு மாநில நிதிக்குழுவில் மானியம் பெற்று ரூ.5 கோடி செலவில் காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறை அருகே புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

அங்கு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் முன்னேற்றும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் உடனடி அனுமதி வழங்கி வருகிறார். அந்த வகையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கும் அனுமதி வழங்கி அது தற்போது திறந்து வைக்கப்பட்டது.இங்கு தொடங்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்ட காற்று உலர்த்தியில் 31.32 MLD வரை குடிநீரை காற்றூட்டம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரும்பு தாதின் அளவு 0.3 mg/lt என்கிற அளவில் தான் இருக்கும் அதனால் தூய்மையான குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.

இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் திருச்சி மாநகராட்சி மண்டலம்-5க்குட்பட்ட மங்களம் நகர், உறையூர் (பழையது, உறையூர் (புதியதுபாத்திமா நகர், செல்வா நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் (பழையது, புத்தூர் (புதியது, ரெயின்போ நகர் ஆகிய 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு உந்தப்படும் குடிநீரில் இரும்பு தாது அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக உள்ளதையும், கலங்கலாக வருவதையும், குறைத்து அனுமதிக்கப்பட்ட அளவில் (0.3 mg/ltr) கலங்கல் இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்