தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. போக்குவரத்து காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி, மார்க்கெட், தில்லை நகர், கோட்டை பாலம் வழியாக மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. இப்பேரணியை துவக்கி வைத்த கமிஷனர் சத்திய பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருச்சி மாநகரத்தில் வாகன விபத்தை குறைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கூடுதல் எண்ணிக்கையிலான போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுவது குறித்த புகார்கள் தொடர்ந்து வருவதால் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லை என்றார்.
திருச்சி மாநகரத்தில் சாலையோரம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதேபோல் போக்குவரத்து சிக்னல்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பதும், கார் கண்ணாடிகளை சோப்பு நீர் கொண்டு அனுமதியின்றி சுத்தம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு சேர்ந்த விக்ரம் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா பேட்டியளித்தார். முன்னதாக, தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன மரக்கன்றுகளை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.