ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருச்சி மாநகர் ஜி. கார்னர் பகுதியில் வருகிற 24-ம் தேதி முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள், கட்சியின் 52-து ஆண்டு தொடக்க நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இதில் நடைபெறுகிறது.இது தமிழக மக்களுக்கு பெருமையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கில் கூட இருக்கின்றோம்.

மாநாடு நடைபெறும் நாளில் காலை முதல் தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வருவார்கள். 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்கி 9 மணி வரை நடைபெறும்.ஏற்கனவே இந்த மாநாட்டுக்கு சசிகலா, தினகரன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பத்திரிகை வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் அழைப்பு விடுத்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் இணையவும், கலந்து கொள்ளவும் முடியும்.இந்த மாநாட்டுக்கான பந்தக்கால் விழா நாளை அதிகாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது. நாங்கள் தனி மரமா, தோப்பா என்பதை மாநாடு தெரிவிக்கும்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் அறிவித்திருப்பதற்கு உரிய பதில் நடவடிக்கையை ஓ பன்னீர்செல்வம் எடுப்பார். இந்த மாநாட்டை நாங்கள் அறிவித்த போது ஓபிஎஸ் அணி என்று கூறினார்கள். இது அணி அல்ல மக்களின் படை என்பதை நிரூபித்து காட்டுவோம்.ஆளுநர் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு சர்வ சுதந்திரம் உள்ளது.எங்களுக்கு போட்டியாக மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மாநாட்டை நடத்துவார்களா? அல்லது ஓடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த மாநாட்டுக்கு பின்னர் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைவார்கள். ஒரு சிலர் மட்டும் விலகி நிற்பார்கள். மோடியா அல்லது இந்த லேடியா என ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். அதே பாணியில் எங்களுடைய அரசியல் பயணம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *