திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டை அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை தா.பேட்டை பேரூராட்சி அலுவலர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர். தா.பேட்டை அருகே காவிரிப்பட்டி செல்லும் சாலை பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து வழி தவறிய இரண்டு வயதுடைய பெண் புள்ளிமான் என்.கருப்பம்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த மானைக் கண்ட அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் மானை துரத்தி கடித்தது. இதனால் மேலும் மிரண்ட மான் அங்கிருந்து ஓடி அப்பகுதியில் இருந்த வள மீட்பு பூங்காவிற்குள் தஞ்சமடைந்தது. இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்கள் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன், செயல்அலுவலர் அன்பழகன், தலைமை எழுத்தர் செல்வகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செயல் அலுவலர் அன்பழகன் கால்நடை மருத்துவர் மற்றும் வனசரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த கால்நடை மருத்துவர் சக்திவேல் புள்ளி மானுக்கு சிகிச்சை அளித்தார். அதனைத்தொடர்ந்து மானின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சை அளிக்க வனச்சரக அலுவலகத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. வழிதவறி வந்த புள்ளி மானை அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்