திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருவெள்ளரை ஊராட்சியில் அனைத்து கிராம மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், இந்த ஊராட்சி 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் உள்ளது. இதில் திருவெள்ளறை ஊராட்சி 9 வார்டுகளை உள்ளடங்கியுள்ளது. இந்த ஊராட்சியில் 8 ஆயிரத்து 438 மக்கள் தொகையினைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சியில் பிரசித்திப் பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. திருவெள்ளறை ஊராட்சியில் காலவாய்ப்பட்டி, திருவெள்ளரை, தெற்கு சாலக்காடு, சின்னக்காட்டுகுளம், செங்குடித்தெரு, மணலிபள்ளம், புண்ணாகுளம் போன்ற கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 4 ஆயிரத்து 75 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு அதிளவில் தடுப்பூசி முகாம் நடத்தி வருகின்றனர். இந்த முகாமில் தடுப்பூசி போட மக்கள் முன் வந்து செலுத்திக் கொள்கின்றனர். ஆனால் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் தடுப்பூசி செலுத்து வருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தற்போது பரிசுப் பொருட்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சியில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 4,075 வாக்களர்கள் அனைவரும் கடந்த 90 நாட்களில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்ற பெருமையினை பெற்றுள்ளது இந்த ஊராட்சி.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் லதாகதிர்வேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

 

சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கொண்ட குழு கொரோனா தடுப்பூசி முகாம் மூன்று முறை நடத்தியதில் 1250 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்பதனை அறிந்துக் கொண்டோம். வாக்காளர் பட்டியலைக் கொண்டு தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிதளப் பொறுப்பாளர்களை வைத்து 20 குழுவாக பிரித்து விடுபட்ட 1250 பேரை கண்டறிந்தோம். பின்னர் சிறப்பு முகாம் நடத்தியதில் 1000 ம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தினர். 250 பேர் சில சூழ்நிலைகளால் வரமுடியவில்லை. விடுபட்டவர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைக்க வேண்டுமென்ற முனைப்புடன் மீண்டும் சிறப்பு முகாம் நடத்தியதில் 250 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனால் எங்கள் திருவெள்ளரை ஊராட்சியில் 100 சதவீத மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்ற தெரிவித்த போது எங்களை பாராட்டியதோடு, ஊராட்சிக்கு எது தேவையோ அதனை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தது பெருமையாக இருந்தது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்