விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கனத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தன.   

வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் மற்றும் எல்.ஐ.சி., வங்கி, பி.எஸ்.என்.எல். பொதுக் காப்பீட்டு துறை என பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 5 தொழிற்சங்கங்கள் உள்பட மொத்தம் 15 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்நாள் போராட்டத்தில் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடந்துவருகிறது. இதையொட்டி வங்கிப்பணிகள், எல்.ஐ.சி. பொது காப்பீடு, பி.எஸ்.என்.எல். தொழில் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிகள் தொடங்கின. இதையொட்டி சிஐடியு உள்ளிட்ட அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த 10 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 5 தொழிற்சங்கங்கள் என மொத்தம் 15 தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் என்று திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோன்ஸ் தலைமை தாங்கினார். இதில் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக பல வங்கிகள் மூடப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் டி.டி எடுப்பது, காசோலை கலெக்சன் போடுவது போன்ற பல்வேறு வங்கி சேவை பணிகள் பாதிக்கப்பட்டது.இதனால் கோடிக்கணக்கில் பணவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏப்ரல் 1ந் தேதி வங்கிகள் செயல்பட்டாலும், வருடாந்திர கணக்கு முடிக்கும் பணியால் வாடிக்கையாளர்கள் சேவை இருக்காது. ஏப்ரல் 2ந்தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். எனவே இந்த வாரத்தில் நாளை ( புதன்), நாளை மறுநாள் (வியாழன்) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கால் டாக்சிகள் 40 சதவீதம் இன்று 2வது நாளாக ஓட வில்லை.  மேலும் திருச்சி மாவட்டத்தில் சிஐடியூ ஆட்டோக்கள், கால்டாக்சிகள் ஓடவில்லை.

இன்றும், முழுவதுமாக பந்த் கடைபிடித்து வருவதால் மாநகர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக மாநகர காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன்படி திருச்சி மாநகரில் மட்டும் 1,500 காவல்துறையினர் இன்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

 போராட்டம் குறித்து திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராமராஜ் கூறுகையில்

“பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து செயல்படுத்தி உள்ளன. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ரூபாய் 100 கோடி வீதம் இரண்டு நாட்களில் ரூபாய் 200 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்