தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளை(அக்டோபர்14) முதல் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப் படவுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்திற்காக கேரள மாநிலம் கொச்சினில் இருந்து கடந்த 7ம் தேதி செரியபாணி என்ற பெயர் கொண்ட கப்பல் நாகை துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதையடுத்து செரியபாணி கப்பலுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி கடந்த 8ம் தேதி இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு தமிழகத்தில் இருந்து சென்ற செரியபாணி கப்பல் மீண்டும் அங்கிருந்து தமிழகம் நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

தமிழகம் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணம் செய்ய ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்துடன் பயணக் கட்டணம் 6500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கப்பலில் 50 கிலோ வரையில் பயணிகள் தங்கள் உடைமைகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக எடுத்துச் செல்லலாம். இதில் பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் ஈ விசா தேவை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சில நிர்வாக காரணங்கள் காரணமாக இந்தியா(தமிழகம்-நாகை), இலங்கை(காங்கேசன்) இடையேயான கப்பல் போக்குவரத்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்பொழுது மீண்டும் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இந்த கப்பல் பயணத்தை முன்னிட்டு பயணிகள் முனையத்தில் சோதனை செய்யும் கருவிகள், குடியுரிமை, சுங்கத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது. மேலும் முதல் நாள் சிறப்பு கட்டணமாக கப்பல் போக்குவரத்து பயணத்திற்கு 3000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை(அக்டோபர்14) முதல் தொடங்கப்படவுள்ள கப்பல் போக்குவரத்தில் முதல் நாளில் பயணம் செய்வதற்கு 35 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நாகையிலிருந்து இலங்கைக்கு கேரள மாநிலம் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவையை நாளை பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மத்திய துறைமுகங்கள் கப்பல் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் இன்று விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.குறிப்பாக இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பிருப்பதால் தற்காலிகமாக சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டு மீண்டும் மார்ச் மாதம் முதல் தினந்தோறும் நாகை – இலங்கைக்கு இடையே இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *