திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி மாலை வாஸ்து பூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகளுடன் விழா தொடங்கியது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பட்டன. 9.30 மணிக்கு விமான சம்பிரோக்ஷணம் நடைபெற்றது.
காலை 9.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு மகா சம்ரோக்ஷணம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு பஞ்ச தரிசனம் நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ பாஞ்சாராத்திரி ஆகம முறைப்படி திருச்சி மாவட்டம் திருவெள்ளரை பெரிய கோவில் மிராஸ் அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் பட்டர் சர்வ சாதகராக இருந்து நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரின் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது மேலும் மாலை 6 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா மற்றும் பூஜைகளில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.