திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் ஜெய் அகோர காளி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை நிர்வகித்து வருபவர் அகோரி மணிகண்டன். இவர் இங்கு வடநாட்டில் உள்ள அகோரிகளைப் போல இங்கும் சில முரண்பாடான பூஜைகளில் ஈடுபட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். நள்ளிர நேரத்தில் பூஜை செய்வதும், அதுவும் மனித மண்டை ஓடுகளை கழுத்தில் அணிந்து பூஜை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகோரி மணிகண்டனின் தாய் இறந்து விட்டார். அவரது உடலை சுடுகாட்டில் வைத்திருந்த போது அவருடைய உடல் மீது அமர்ந்து பூஜைகள் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி அருகே மத நல்லிணக்க சுடுகாடு மற்றும் இடுகாடு ஒன்று உள்ளது. அதில் நேற்று நள்ளிரவில் எரிக்கப்பட்ட சடலத்திற்கு முன்பாக பெண்களும், சிறுவனும் அமர்ந்து அகோரிகளுடன் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது ஊரடங்கு என்பதால் கோயில்கள் திறக்கப்படாத நிலையில் அகோரி மணிகண்டன் இப்படி பெண்கள் சிறுவர்களை சேர்த்துக்கொண்டு சுடுகாட்டில் நள்ளிரவில் அமர்ந்து பூஜைகள் செய்து வருகிறார். உடனடியாக இது போன்ற செயல்களை தடுக்க வேண்டும் எனவும் போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பது இது போன்ற செயல்கள் மேலும் தொடர்ந்து நடப்பதற்கு ஊன்றுகோலாக அமையும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.