திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா கல்லூரிக் கலை அரங்கில் இன்று நடைபெற்றது இந் நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராகத் திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் குணசேகரன் கலந்து கொண்டு இந்தக் கல்வி ஆண்டுக்கான மன்றங்களைத் தொடக்கி வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார் . தனது உரையில் மாணவப் பருவம் என்பது பூந்தோட்டம் போல.அந்தப் பருவத்தில் மாணவர்கள் கோழி போல் நிகழ வேண்டும் குப்பைகளைக் கிளறி உள்ளே இருக்கக் கூடிய நல்மணிகளைக் கோழி எவ்வாறு எடுத்துக் கொள்கிறதோ அதுபோல மாணவர்களும் குப்பைகளை நீக்கி நல்லவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . மரம் எவ்வாறு பல பறவைகளுக்குப் பயன் தருகிறதோ அதுபோல் மாணாக்கர்களும் பயன் தரும் மரமாக இருந்து வருங்காலத்தில் இந்தச் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக மாற வேண்டும் என்றார் .

மேலும் இக்கல்லூரியில் பணியாற்றும் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு ஆற்றல் சார்ந்தவர்களாக விளங்குகின்றனர் . அவர்களைப் பின்பற்றித தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார் .

முன்னதாக வரவேற்புரையைத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையைத் தமிழ்த்துறைத் தலைவரும் தேர்வு நெறியாளருமான முனைவர். வாசுதேவன் நன்றி உரையினை வரலாற்றுத் துறைத் தலைவர் ஜெரோம் பெர்னாண்டோ நிகழ்த்தினர் . தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் . குணசேகரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார் . விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *