திருச்சி சிவாவின் இல்லத்திற்கு அருகே புதிய டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என் நேரு அங்கு வந்தார். இந்த புதிய டென்னிஸ் கோர்ட் திறப்பு விழா பெயர் பலகையில், திமுக எம்.பி சிவா பெயர் இல்லாததால், எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் திமுக அமைச்சர் கே.என் நேருவின் காரை வழிமறித்தனர்.மேலும், சிவாவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா இல்லாமல் அந்த மைதானத்தை திறக்க கூடாது என முழக்கம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து கே.என் நேருவின் உடன் வந்த அவரது ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் முத்து செல்வம் தலைமையில், MPசிவாவின் கார் கண்ணாடி மற்றும் வீடு, நாற்காலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர்.
இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டு அவரது வீடு சூறையாடப்பட்டது. அப்பகுதியை போர்க்களம் போல் காணப்பட்டது. திமுக அமைச்சர் கே என் நேருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கண்டித்து, துறையூர் திமுக எம்எல்ஏ ஸ்டாலின் குமார், திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, புஷ்பராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
இதனால் போலீஸாருக்கும் திமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், திமுகவில் இருந்து வந்த, கோஷ்டி பூசல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.