திருச்சி மத்திய சிறை வளாகத்தில் மற்ற நாட்டைச் சேர்ந்த கைதிகளை தங்க வைப்பதற்காக அவர்களுக் கென்று தனியாக அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் நைஜீரியா, இலங்கை, ரூவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 110-க்கும் மேற்பட்ட அயல் நாட்டைச் சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் சிலர் கடந்த சில மாதங்களாக தங்களின் தண்டனை காலம் முடிந்த பின்பும் தங்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதாக கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களை உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், கை, கால்களை கத்தியால் அறுத்துக் கொள்வது, மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களின் கோரிக்கைகளை அரசிற்கு அதிகாரிகள் எடுத்து கூறி அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 16 பேர் தொடர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து பின்னர் குணமடைந்து முகாமிற்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே காலை நேரத்தில் கைதிகளை சிறப்பு முகாமில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கணக்கெடுப்பது வழக்கம். கைதிகளை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிலியானா டிராக்கோவ் (வயது 45) என்பவரை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறப்பு முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சிறை அதிகாரிகள் சிறப்பு முகாமிற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சோதனையின் போது சிறப்பு முகாமில் தடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த ஜன்னல் இரும்பு கம்பியை அறுத்து கொண்டு வெளிநாட்டு கைதி தப்பி சென்றிருப்பது போலீசார் விசாரனையில் தெரியவந்தது.

இதையடுத்து அங்குள்ள கைதிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரனை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பிய கைதி மற்ற நாட்டிற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையம், பேருந்து நிலையம், ரெயில் நிலையம் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிரபடுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பி சென்ற கைதி பண மோசடி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 2019-ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் முகாமில் இருந்து வெளிநாட்டு கைதி தப்பி சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.