திருச்சி, லால்குடி, மங்கம்மாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னப்பன். இவரது மகன் ஜெகன் (28). இவர் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திருச்சி மலைக்கோட்டை கோவிலில் நேற்று இரவு பணியில் இருந்தார்.

இன்று அதிகாலை கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் கோவில் நடை திறப்பிற்கு வந்தபோது, மலைக்கோட்டை சரக்கு பாறை அருகே யானை கட்டும் இடத்திற்கு எதிரே உள்ள கோவில் அலுவலகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஜெகன் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூய்மை பணியாளரான ஜெகன் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஏற்பட்ட மரணம் காரணமாக, பரிகார பூஜை செய்யப்பட்டு கோவில் புனித படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோவில் நடை சாத்தப்பட்டு மதியம் 12 மணிக்கு மேல் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *