திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் மேலப்பாகனூர் கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் சித்தி விநாயகர், தானா முளைத்த (சுயம்பு) முத்துமாரியம்மன், மகா காளியம்மன், பகவதி அம்மன், ஐயனார், ஒண்டிகருப்பர், சிவன், நாகநாதர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைமுன்னிட்டு கடந்த மாதம்  27-ம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி திங்கட்கிழமை காலை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை கூடத்தில் மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட முதல்கால யாகசாலை பூஜையும் 5-ம் தேதி காலை ஆச்சாரியார் யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட 2-ம் கால பூஜையும் அன்று மாலை லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

இதைத்தடர்ந்து இன்று காலை திரிசதி அர்ச்சனை, நாடி சந்தானம் உள்ளிட்ட 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து  காலை 9.15 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை ஊர் முக்கியஸ்தர்கள், சிவாச்சாரியர்கள் ஆகியோர் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றிவந்து அந்தந்த கோவில் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கருடபகவான் தரிசனத்திற்கு பின்னர் முத்துமாரியம்மன், காளியம்மன், விநாயகர், பகவதிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின்  கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.