திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ந.வெங்கடேசன் (38). திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதுநிலை டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கோவையில் அவரது மனைவி பணியாற்றி வரும் நிலையில் அங்கு சொந்தமாக வீடு கட்டிவருகின்றனர். அதற்காக வங்கியில் கடன் பெற்று, வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை எடுத்துக்கொண்டு மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கோவைக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலயைத்துக்கு வெங்கடேசன் வந்துள்ளார். ரயிலுக்காக 1 ஆவது நடைமேடையில் காந்திருந்த அவர் மதுபோதையில் மயங்கி விட்டார். இதனால் கோவை செல்லும் ரயிலையும் தவறவிட்டார்.
இந்தநிலையில் திருச்சி ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீஸôர் விஜயலட்சுமி, நாகலட்சுமி, பிரசாந்த் ஆகியோர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 1 ஆவது நடைமேடையில் வெங்கடேசன் போதையில் மயங்கி கிடந்ததை பார்த்துள்ளனர். அவரருகே விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் பை ஒன்றும் கிடந்துள்ளது. அவரை எழுப்ப முயன்றும் எழவில்லை. அருகில் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக ரூ.9 லட்சம் பணம் மற்றும் வங்கிக் காசோலை, வங்கி கணக்குப்புத்தகம் உள்ளிட்டவை இருந்துள்ளது.
இதனையடுத்து, வெங்கடேசனையும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களையும் ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் ராஜேஸ்வரி, பிரசாந்திடம் ஒப்படைத்தனர். வெங்கடேசனுக்கு போதை தெளிந்ததும், கோவையில் உள்ள வெங்கடேசனின் மனைவிக்கு தகவல் கொடுத்து திருச்சிக்கு வரவழைத்தனர். பின்னர் அவர் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்களை காவல் ஆய்வாளர் மோகனசுந்தரி ஒப்படைத்தார். மேலும், அவருடைய மனைவிக்கு அறிவுரை கூறியதுடன், வெங்கடேசனை எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.